செய்தி விவரங்கள்

மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி

உலகத் தமிழருக்கோர் உறவுப் பாலம் என்ற தாரக மந்திரத்துடன் செயற்படும் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி இந்த ஆண்டு மேலும் பல புதிய படைப்புக்களை அதன் இரசிகர்களுக்கு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக ஐ.பி.சி தமிழ் நிர்வாகம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

புலம்பெயர் தமிழ் சமூகத்தின் குரலாக 1997 ஆம் ஆண்டு யூன் மாதம் முதல் கடந்த 20 ஆண்டுகளாக வானொலி அலை வரிசை ஊடாக ஒலித்துகொண்டிருக்கும் ஐ.பி.சி தமிழ், 2015 ஆம் ஆண்டு ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியாக மற்றுமொரு பரிணாமம் பெற்றது.

எம்மவர் மத்தியில் இருந்த தகவல் மற்றும் பொழுது போக்குக்குரிய ஒளி, ஒலி ஊடகத்தின் தேவையை உணர்ந்த நிலையிலேயே புலம்பெயர் தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த உலகத் தமிழருக்கோர் உறவுப் பாலமாகத் திகழும் உன்னதமான நோக்கத்துடன் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி தனது பணியை ஆரம்பித்தது.

பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி பிரான்ஸ், சுவிஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தனது கலையகங்களை அமைத்து புலம்பெயர் தமிழ் மக்களை அடிப்படையாகக் கொண்ட செய்தி மற்றும் நடப்பு விவகார நிகழ்ச்சிகள் மாத்திரமன்றி, கலை நிகழ்ச்சிகயையும் தயாரித்து வருகின்றது.

அதேபோல் இந்தியாவின் தமிழகத் தலைநகர் சென்னையிலும் கலையகத்தைக் கொண்டிருக்கும் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சித் தொடர் நாடகங்கள், நடப்பு விவகாரங்கள், செவ்விகள், நகைச்சுவை, வினோத நிகழ்ச்சிகள் மற்றும் திரைவிமர்சனம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி வருகின்றது.

அத்துடன் தமிழர் தாயகத்தின் கலாசாரத் தலைநகரமான யாழ்ப்பாணத்திலும் கலையகத்தைக் கொண்டிருக்கும் ஐ.பி.சி தமிழ் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களை தமது சொந்தக் கிராமங்களுக்கே அழைத்துச் செல்லும் வகையில் வணக்கம் தாய்நாடு உட்பட பல முற்றத்து நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி வருகின்றது.

அதேபோல் தென்னிலங்கையின் தலைநகர் கொழும்பிலும் கலையகத்தை அமைத்திருக்கும் ஐ.பி.சி தமிழ், தமிழர் தாயகம் உட்பட இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் இடம்பெறும் சம்பவங்களையும் நிகழ்வுகளையும் சேகரித்து செய்தியாக உடனுக்குடன் எம்மவரின் வீட்டிற்கு எடுத்துவருகின்றது.

இந்த நிலையில் இன்று மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி அதன் இரசிகர்களுக்காக பல புதிய படைப்புக்களை வழங்க காத்திருப்பதாக ஐ.பி.சி தமிழ் நிர்வாகம் தெரிவிக்கின்றது.

இதில் கலை மற்றும் விழுமியங்கள் சார் படைப்புக்களுடன் பொழுது போக்கு அம்சங்களையும் உள்ளடக்கிய பல புதிய வரவுகளையும் அறிமுகப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வகை : arts-culture குறிச்சொற்கள் : #ibctamil #media 0 கருத்துக்கள்
April 19 / 2017