செய்தி விவரங்கள்

ஐ.பி.சி தமிழின் நடனராஜா போட்டி இறுதிச் சுற்று - ஐ.பி.சி தமிழா லண்டன் 2017

ஐரோப்பாவில் வாழும் புலம்பெயர் சமூகத்தின் நடனக் கலைஞர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்து அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஐ.பி.சி தமிழ் நடத்திய நடனராஜாஸ் போட்டியில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஐ.டான்ஸ் ஸ்டூடியோ குழு மகுடம் சூட்டிக்கொண்டது. இதற்கான வெற்றிக் கிண்ணத்தையும், பத்தாயிரம் ஸ்ரேலிங் பவுண் பணப் பரிசிலையும் அவர்கள் தட்டிச் சென்றனர்.

பிரித்தானியத் தலைநகர் இலண்டனிலுள்ள வெம்பிளி எஸ்.எஸ்.ஈ அரங்கில் ஏப்பிரல் 16 ஆம் திகதி நடைபெற்ற ஐ.பி.சி தமிழா 2017 பிரமாண்டமான நிகழ்வின் ஒரு அங்கமாக ஐ.பி.சி தமிழ் நடத்திய நடனராஜா போட்டி நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று நடைபெற்றது.

ஓன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட அரங்கு நிறைந்த இரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த இறுதிச் சுற்றுப் போட்டிக்கு ஐந்து அணிகள் தெரிவாகியிருந்தனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட நடனராஜாஸ் முதல் சுற்று முதல் அரையிறுதிச் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் பிரித்தானியத் தலைநகர் இலண்டனிலுள்ள முன்னணி அரங்குகளில் நடைபெற்றன.

இந்தச் சுற்றுக்களில் பிரித்தானியா மாத்திரமன்றி அனைத்து ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் ஏராளமான நடனப் போட்டியாளர்களும் நடனக் குழுக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதற்கமைய இறுதிச் சுற்றுக்கு தெரிவான இரண்டு நடனக் குழுக்களும் நடனக் கலைஞர்கள் மூவரும் தென் இந்திய தமிழ்த் திரையுலகின் இளம் நடிகரும் நடனக் கலைஞருமான பாக்கியராஜ் சாந்தனு, அவரது மனைவியும் நடனக் கலைஞருமான கீ்.கீ மற்றும் இளம்  நடன ஆசிரியர்களான சேன்டி மற்றும் அனிஸ் ரகுமான் ஆகியோர் முன்னிலையில் இரண்டு சுற்றுக்களாக போட்டியிட்டனர்.

புலம்பெயர் தமிழ் சமூகம் கடந்துவந்த போரின் கொடூரத்தை சித்திரிக்கும் வகையில் முதலாவது சுற்று நடனங்கள் அமைந்திருந்தன. இதில் ஐந்து அணிகளும் தமது படைப்புக்களை வெளிப்படுத்தினர்.

புலம்பெயர் இளம் தலைமுறையினரின் இந்த நடனங்களைப் பார்த்து  போரின் கொடூரத்திலிருந்து இன்னமும் மீள முடியாது தவிக்கும் அரங்கிலிருந்த புலம்பெயர் தமிழர்கள் நெகிழ்ந்த கண்கலங்கியதையும் அவதானிக்க முடிந்தது.  

இரண்டாவு சுற்றில் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி நடன அமைப்பை போட்டியாளர்கள் தெரிவு செய்திருந்தனர். இதற்கமைய முதலாவது இடத்தை பிரித்தானியாவைச் சேர்ந்த ஐ.டான்ஸ் ஸ்டூடியோ நடனக் குழுவினர் தட்டிச் சென்றனர். இதற்காக அவர்களுக்கு வெற்றிக் கிண்ணம் மாத்திரமன்றி, பத்தாயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸ் பணப் பரிசிலுக்கான காசோலையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நடனராஜாஸ் போட்டியில் இரண்டாம் இடத்தை பிரான்ஸைச் சேர்ந்த டார்க் ஸ்டிங்க்ஸ் நடனக் குழு பெற்றுக்கொண்டது. 

மூன்றாம் இடத்தை சன்ஜய் தலைமையிலான அணியும், நான்காம் இடத்தை பிரபுராஜ் தலைமையிலான அணியும் ஐந்தாவது இடத்தை அருண் தலைமையிலான அணியும் தட்டிச் சென்றனர். 

வகை : arts-culture குறிச்சொற்கள் : #Dance Program #Arts Show 0 கருத்துக்கள்
April 19 / 2017