செய்தி விவரங்கள்

நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல - நடிகர் சத்யராஜ் வருத்தம்

நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல என நடிகர் சத்யராஜ் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட நடிகர் சத்யராஜ் கன்னடர்களையும், கன்னட அமைப்புகளின் தலைவர்களையும் தரக்குறைவாக பேசியதாக கூறி, அவர் நடித்துள்ள ‘பாகுபலி-2‘ திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிடக் கூடாது என்று கன்னட அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
பாகுபலி 2 திரைப்படம் வருகிற 28ம் திகதி நாடு முழுவதும் திரையிடப்பட உள்ளது.
அன்றைய திகதி நடிகர் சத்யராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தவும் கன்னட அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல எனத் தெரிவித்த நடிகர் சத்யராஜ், கடந்த 9 வருடங்களுக்கு முன்னால் நடந்த காவிரி விவகாரம் தொடர்பான கண்டன கூட்டத்தில், தான் வெளியிட்ட கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்படுவதாக அவர்கள் கருதுவதால் அந்த சில வார்த்தைகளுக்காக தற்போது தான் கன்னட மக்களிடம் தன் மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
கடந்த 9 வருடங்களில் ‘பாகுபலி’ பாகம் 1 உள்பட தான் நடித்த சுமார் 30 திரைப்படங்கள் கர்நாடகாவில் வெளியாகியுள்ளதாகவும் அப்போது எந்த பிரச்சினையும் எழவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று ‘பாகுபலி’ படத்தின் இயக்குனர் ராஜமௌலி தனது சுட்டுரையில் பாகுபலி படத்தை திரையிட அனுமதிக்குமாறு கன்னட மக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வகை : cinema குறிச்சொற்கள் : #Sathyaraj-apologises 0 கருத்துக்கள்
April 21 / 2017