செய்தி விவரங்கள்

மீதொட்டமுல்லயில் ஆயுதத்துடன் இராணுவம்; இரசியத்தை வெளியிட்ட லஹிரு

கொழும்பு மீதொட்டமுல்ல அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் காணப்பட்ட மக்களின் குடியிருப்புக்களை சட்டவிரோதமானவை என்று நல்லாட்சி அரசாங்கம் தெரிவித்தாலும், சீனாவினால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் போர்ட் சிற்றி திட்டமே சட்டவிரோதமானது என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
 
குப்பை மேடு அனர்த்தம் இடம்பெற்ற தினத்தில் கலகத்தில் ஈடுபடும் மக்கள் மீது தாக்குதலை நடத்துவதற்கே இராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டார்களே தவிர, மீட்புப் பணிகளுக்காக அல்ல என்றும் அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
 
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்றது.
 
இதில் கலந்துகொண்ட அந்த ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர, குப்பை மேட்டு விவகாரம் குறித்து நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது கடும் எதிர்பினை வெளியிட்டார்.
 
“இந்த நாட்டு சட்டம் என்ன செய்கிறது? மீதொட்டமுல்ல குப்பைகளை கொண்டுவர வேண்டாம் என கரதியான மற்றும் தொம்பே மக்கள் வீதியில் இறங்கினார்கள். எமது பிள்ளைகளும் அவ்வாறு உயிரிழக்க இடமளியோம் என்றும், இதற்கு தீர்வைப் பெற்றுத்தருமாறும் அவர்கள் கோரினார்கள். மீதொட்டமுல்ல மக்களின் வீடுகள் சட்டவிரோதமான கட்டிடங்கள் என்பது முற்றிலும் பொய். 80,90 வருடங்கள் வாழ்ந்த ஒருவரது சொந்த நிலத்தை சட்டவிரோதமான குடியிருப்பு என்பது எவ்வாறு கூற முடியும்? மீதொட்டமுல்ல பகுதியா சட்டவிரோதமானது? போர்ட் சிற்றி திட்டமே சட்டவிரோதமானது. குரதியான பகுதியில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ள நிலையில் அதற்கெதிராக நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்படித்தான் சட்டம் செயற்படுகிறது. நேற்று தொம்பே மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அன்று மாணவர்களை துரத்தி ஓடவிட்டு தாக்கும்போது நாளை வீதியில் இறங்கிப்பாருங்கள் யாருக்கு தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்பதை கூறியிருந்தோம். அதனால் இன்று அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் அடக்குமுறை நடவடிக்கைக்கு எதிராக செயற்படுவோம். அன்றும் மீதொட்டமுல்ல மக்களோடு நாங்கள் இருந்தோம். நாளை கரதியான மக்களோடும் இருப்போம். மீதொட்டமுல்லைக்கு மக்களை சந்திப்பதற்கா பிரதமர் சென்றார்? இல்லை. பிரதமரை சுற்றிலும் துப்பாக்கியுடன் இராணுவத்தினரே இருந்தனர். அனர்த்தம் இடம்பெற்ற தினத்தன்று அங்குவந்த இராணுவத்தினரது கைகளில் சவலும் இருக்கவில்லை. துப்பாக்கியே இருந்தது. ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் தண்ணிர் பீரங்கித் தாக்குதலை நடத்தும் டிரக் வண்டிகள் காத்துக்கொண்டிருந்தன. இப்படியான ஆட்சிமுறையே இன்று நிலவுகிறது” – என்றார்.
April 21 / 2017