செய்தி விவரங்கள்

மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளை சர்வமதத் தலைவர்கள் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகளை சர்வமதத் தலைவர்கள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இன்றைய தினம் 60 ஆவது நாளாக, போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவே சர்வமதத் தலைவர்கள் போராட்ட பகுதிக்கு சென்று கலந்துரையாடியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், தமக்கான நியமனத்தை வழங்குமாறு கோரி, மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், வாயைக் கறுப்புத் துணிகளால் கட்டியும் கறுப்புக்கொடிகளை ஏந்தியவாறும், கொடும்பாவிகளைத் தாங்கியவாறும், பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் இன்றைய தினம் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்தனர்.

சமூகத்தில் வேலையற்ற பட்டதாரிகள் என்ற அடையாளத்துடன் இருக்கும் தங்களுக்குப் பின்னால் நிறைய துன்பங்கள் உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மனவருத்தத்திற்கு மத்தியிலும் விரக்திக்கு மத்தியிலும் தமது போராட்டம் தொடர்கின்ற போதிலும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தங்களை வந்து பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

April 21 / 2017