செய்தி விவரங்கள்

அவசர காலச் சட்டத்தை பயன்படுத்துமாறு மைத்திரிக்கு ஜே.வி.பி ஆலோசனை

அவசர காலச் சட்டத்தை பயன்படுத்தி நிதியமைச்சைக் கையில் எடுத்து நாட்டில் பூதாகரமாக உருவெடுத்துள்ள குப்பை கூலப் பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி யோசனை முன்வைத்துள்ளது. 
 
இதனை அவர் செய்யாமல் ஏட்டிக்குப் போட்டியாக மக்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் குப்பைகளை எங்கு வேண்டுமானாலும் இடமாற்றும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வருவதாக அந்தக் கட்சி விசனம் வெளியிட்டுள்ளது.
 
32 பேரi பலியெடுத்த கொழும்பு மீதொட்டமுல்ல குப்பை மேட்டு சரிவு அனர்த்தம் இடம்பெற்ற பிரதேசத்திற்கு ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இன்றைய தினம் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
 
அங்கு சென்ற அவர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து குறை நிறைகளைக் கேட்டறிந்துகொண்டதோடு, அனர்த்தம் இடம்பெற்ற பகுதியையும் சென்று பார்வையிட்டார்.
 
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “இந்த குப்பை மேட்டுப் பிரச்சினை பூதாகரமாக எழுவதற்கு முன்னரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்த்திருந்தால் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் இன்றும் உயிரோருந்திருப்பார்கள். குப்பை மேட்டிற்கு அருகிலிருந்த ஒருபகுதி மக்களே அழிவை எதிர்கொண்டுள்ளனர். மறுபக்கத்தில் அழிவை எதிர்கொள்ளவுள்ளனர். இதுகுறித்து தேசிய ரீதியில் உணர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இங்குள்ள குப்பைகளை வேறுஇடங்களில் குவித்து சுற்றுச்சூழல் பிரச்சினையை உருவாக்க வேண்டாம். மக்களை அச்சுறுத்தி அவசர காலச்சட்டத்தை பயன்படுத்தி அல்லது  வேறு இடங்களில் குப்பைகளை இடமாற்ற அதிகாரத்தை பயன்படுத்தினால் அரசாங்கம் தவறுசெய்வதாகவே அர்த்தம் பெறும். மக்களின் சக்தி அதைவிடவும் பெரிது. தமது பிரதேசத்துக்கு குப்பைகளை கொட்டி பாதிப்பை ஏற்படுத்துவதை எதிர்க்க மக்களுக்கு உரிமையுள்ளது. இன்று மீதொட்டமுல்ல மக்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளை முழுநாட்டு மக்களும் வீதியில் இறங்க நேரிடும். அரசாங்க அமைச்சர்களுக்கு களவாட பணம் உள்ளது. சொகுசு வாகன கொள்வனவிற்கும், கட்டிட கொள்வனவுக்கும் பணம் இருக்கிறது. அதிவேக நெடுஞ்சாலையை அமைக்க பணம் உள்ளது. தாமரை மண்டபம் மற்றும் கட்டிடம் அமைக்கவும் நிதியுள்ளது. இப்போது அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த வீண் செலவுகளை நிறுத்தி நிதியமைச்சை ஜனாதிபதி தன்வசப்படுத்தி அப்பணத்தை நிவாரணம் வழங்கவும், குப்பைகளை மீள்சுழற்சி நடவடிக்கைக்கும் செலவுசெய்ய வேண்டம். ஜனாதிபதி அவசர காலச் சட்டத்தை பயன்படுத்தி குப்பைப் பிரச்சினையை தீர்க்காமல் அவர் இன்று குப்பைகளை எங்கு வேண்டுமானாலும் நிரப்பலாம் என்ற அதிகாரத்தையே கையில் எடுத்துள்ளார்.அமைச்சர் ஒருவர் உயரிழந்தால் அதற்கு 50 இலட்சம் வரை பட்ஜட் செய்வார்கள். அமைச்சர் ஒருவர் சுகயீனமுற்றால் சிங்கப்பூருக்கு வேண்டுமானாலும் சிகிச்சைக்கு அழைத்துச்செல்வார்கள். அவற்றுக்கெல்லாம் செலவுசெய்ய பணம் இருப்பதாயின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான நிவாரணத்துக்கும் நிதி அதிகமாக ஒதுக்கிடவேண்டும்” என்றார்.
வகை : internal-affairs குறிச்சொற்கள் : #JVP #Handunethi 0 கருத்துக்கள்
April 21 / 2017