செய்தி விவரங்கள்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட 115 பேரின் விபரங்கள் சமர்ப்பிப்பு

வவுனியா மாவட்டத்தில்  வலிந்து காணாமல்  ஆக்கப்பட்ட 115 பேரின் பேர் விபரங்கள் வடமாகாண சுகாதார அமைச்சர் பா. சத்தியலிங்கத்திடம் காணாமல்  ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபரங்களை எதிர்வரும் 27 ஆம் திகதி சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் தாம் கையளிக்கவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பா. சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியாவில் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு கடந்த மாதம் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ண விஜயம் செய்திருந்தார்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் கலந்துரையாடிய அவர் வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை தனக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிலையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று விபரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று 57 ஆவது நாளாகவும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளோர் காணாமல் போன தமது உறவுகள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரத்தை அரசாங்கம் வழங்கினால் போதும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்கள் மேற்கொள்ளும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 61 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

தமது பிள்ளைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தமைக்கு தாமே சாட்சிகளாகவுள்ள நிலையில் ஏன் அரசாங்கம் காணாமல் போனவர்களின் விடயத்தில் பாரபட்டமாக நடந்து கொள்வதாக அவர்கள் கேள்வி எடுப்பியுள்ளனர்.

இதேவேளை முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் மேற்கொள்ளும் போராட்டம் இன்று 43 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் தமக்கான தீர்வை அரசாங்கம் முன்வைக்காத பட்சத்தில் தமது போராட்ட வடிவம் மாறும் என மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருகோணமலையிலும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்று 48 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

April 21 / 2017