செய்தி விவரங்கள்

மீதொட்டமுல்ல குப்பைமேட்டு பிரதேசம்; அரச சொத்தாக அறிவிக்க தீர்மானம்

மீதொட்டமுல்லயில் இருந்து அனைத்து மக்களும் வெளியேற்றப்பட்டதன் பின்னர் அங்கு எவருக்கும் உள்நுழைய அனுமதி வழங்கப்படமாட்டாது என்பதோடு, அது அரச சொத்தாக அறிவிக்கப்படுமெனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, பாதிக்கப்பபட்டுள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென அறிவித்துள்ளார்.

அனுர பிரியதர்ஷன யாப்பா “முப்படைகளின் தளபதி, அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற கூட்டம் இன்று நடைபெற்றது. 60 வீடுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். பொருட்களை கொள்வனவு செய்ய இரண்டரை இலட்சம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.

சேதமடைந்த வீடுகளை புனரமைப்பது தொடர்பில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வீடுகளுக்கான இழப்பீட்டை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளோம். அருகில் அமைந்துள்ள பாடசாலையில் தற்காலிகமாக தங்கியுள்ள 60 குடும்பங்கள் இன்று அங்கிருந்து வெளியேறுகின்றனர். எஞ்சியுள்ள மக்களை ஞாயிற்றுக்கிழமை மீதொட்டமுல்லயில் அமைந்துள்ள நெற் களஞ்சியசாலையில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அனர்த்தம் ஏற்படுமென அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு மூன்று மாதங்களுக்கு 50 ஆயிரம் வீதம் வழங்க தீர்மானித்துள்ளோம். அவர்களுடைய போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 10 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது.  அதன் பின்னர் தேவையான வீடுகள் அல்லது மாற்று வீடுகளை கொடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

வீடுகளை பெற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு இழப்பீட்டினை வழங்க எதிர்ப்பார்த்துள்ளோம். இழப்பீடு செலுத்தப்பட்டதன் பின்னர் அந்த பிரதேசம் அரச சொத்தாக மாற்றியமைக்கப்படுவதோடு, அந்த பிரதேசத்திற்குள் எவரும் உள் நுழையாதபடி தடை விதிக்கப்படும்.  குப்பையை மீள்சுழற்சி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு பாதனி மற்றும் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்.

கொழும்பு அதனை அண்மித்த பிரதேசங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதில் பிரச்சினை காணப்படுகின்றது. பொது மக்கள் இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டு போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். இதனை நிறுத்துமாறு நாம் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இது ஒரு தேசிய பிரச்சினை. நாம் அனைவரும் இணைந்தே இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்.“

வகை : internal-affairs குறிச்சொற்கள் : #Colombo #garbage 0 கருத்துக்கள்
April 21 / 2017