செய்தி விவரங்கள்

மீதொட்டமுல்ல குப்பைமேட்டால் பறிபோன சிவக்குமாரின் வாழ்க்கை

மனிதரின் வாழ்க்கையில் காலம் எப்படி விளையாடுகின்றது என்பதற்கு சிவக்குமார் நிஜமான சாட்சி. சில கணப்பொழுதுகளில் சின்னாபின்னமாகிவிட்டது சிவகுமாரின் வாழ்க்கை. தன் மனைவி மகனைப் புதைத்துவிட்டு பார்த்துப் பார்த்துவளர்த்த தன் மகளின் உடலத்தை சுமந்து செல்லும் அவலநிலை வந்தால் எந்தத் தந்தையால் தான் அதனைத் தாங்கிவிடமுடியும். இன்றோ தன் மகளின் உடலத்தை தாங்கிய படி செல்கின்ற சிவக்குமாரின் கதி யாருக்குமே வாழ்க்கையில் வந்துவிடக்கூடாது.


கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மீதொடுமுல்லை குப்பை மேடு சரிவு அனர்த்தத்தில் சிவக்குமாரின் மனைவி பாத்திமா பஸிரா மகன் தினுகாந் மகள் பரணிதா மூவரும் காணாமல் போயிருந்தனர். சில மணித்தியாலங்களில்; மனைவி மற்றும் மகனின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டபோதும் மகளைக் காணாது பல நாட்களாக மகளுடைய தொப்பியை அணி;ந்தவாறு தேடித்திரிந்தார்; சிவக்குமார்.


நேற்றையதினம் மாலை மகளின் உடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இன்று பொலிஸ் சவச்சாலையில் பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்ட நிலையில் கவலையின் மத்தயில் எம்மோடு நடந்த சம்பவத்தையும் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார்.


பொரளையில் அமைந்துள்ள உடற்பயிற்சி நிலையமொன்றில் பணிபுரிந்து குடும்பத்தைக் காத்துவந்த சிவக்குமாருக்கு நேர்ந்துள்ள கதி அவரது நண்பர்களையும் உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டுள்ளதை அவர்களது மனக்குமிறல்கள் வெளிப்படுத்தின.

தனது பிரியமான மனைவியையும் மூத்த மகனையும் செல்ல மகளையும் பறிகொடுத்து விட்ட சிவக்குமாருக்கு இன்றோ வாழ்க்கையின் ஆதாரமாக எஞ்சியிருப்பது அவரது மூன்று வயது மகன் மட்டுமே.


மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கண்டும் காணாது தமது சுயநல அரசியலை முன்னெடுக்கும் அரசியல் வாதிகளால் சிவக்குமாரின் உறவுகளுடன் சேர்ந்து ஏறத்தாழ நாற்பது உயிர்கள் காவுகொடுக்கப்பட்டிருக்கின்றன. எத்தனை போரட்டம் நடத்தியும் கோரிக்கைகளை விடுத்தும் ஏதுமே நடக்காத நிலையில் அனர்த்த்தின் பின்னர் இன்று அரசியல் தலைமைகள் அக்கறை காட்டுவதாக அறிவிப்புக்களை விடுக்கின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட தரப்பினர் வேதனையின் சோகத்திலும் தமது போராட்ட நோக்கத்தில் உறுதியாக உள்ளதை அவர்களின் உறுதிமிக்க வார்த்தைகள் வெளிப்படுத்தினர்.


இத்தனை உயிர்களைக் பலியாகக் கொடுத்த பின்னர் இனிமேல் ஒரு உயிர் கூட குப்பையால் போய்விடக்கூடாது என்பதில் பிரதேச மக்கள் உறுதியோடு நிற்கின்றனர்.

அளித்த உறுதிமொழிகள் கடந்த காலத்தைப் போன்று மீண்டும் காற்றில் பறக்கவிடாது மனிதத்தை காப்பாற்றுவார்களா இந்த நாட்டின் அரசியல் தலைமைகள் அன்றேல் சிவக்குமார் அவர்தம் சின்னமகன் வாழ்க்கையில் விளையாடிய பேரவலம் போன்ற பேரவலங்கள்; எதிர்காலத்திலும் ஏற்படும் வகையில் அலட்சியசெய்வார்களா?

 

வகை : internal-affairs குறிச்சொற்கள் : #Colombo #meetotamulla 0 கருத்துக்கள்
April 19 / 2017