செய்தி விவரங்கள்

சமுத்திரகனி இயக்கி நடித்துள்ள தொண்டன் படத்தின் பிரஸ்மீட் நேற்று நடைபெற்றது.

அப்பா படத்தை அடுத்து சமுத்திரகனி இயக்கி நடித்துள்ள படம் தொண்டன். இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

அப்போது சமுத்திரகனி பேசும்போது, தொண்டன் என்னோட11வது படம்.

கரூரில் நடந்த ஒரு உண்மைச்சம்பவம்தான் இந்த படத்திற்கான தூண்டுதலாக இருந்தது. பெண்கள் கல்லூரிக்குள் போய் நாற்காலியின் காலை உடைத்து ஒரு பெண்ணை அடிச்சு கொன்றான் ஒருவன். அந்த கிளாஸ் ரூமுக்குள் இருந்த பெண்களெல்லாம் பயந்து கத்திக்கொண்டேயிருந்தார்கள். அடிபட்ட பெண்ணை காப்பாற்ற முடியல. அவங்களோட பயம்தான் அடித்தவனுக்கு தைரியம் கொடுத்தது.

அவங்க திருப்பி அடிச்சிருந்தா என்ன ஆகும்? என்கிற கேள்வி எனக்குள்ள எழுந்தது. இதுதான் இந்த படம் ஆரம்பித்தற்கான ஒரு முதல் புள்ளி. அதன்பிறகு வேற வேற விசயங்கள் வந்தது. 108ஐ பற்றி கேள்விப்பட்டேன். கோபிநாத் ஒருமுறை என்னிடம் சொல்லும்போது, அண்ணே தமிழ்நாட்டில் எங்கயிருந்து போன் பண்ணினாலும் சென்னைக்குத்தான் வரும். அதன்பிறகு இங்கேயிருந்து கோஆர்டினேட் பண்ணுவாங்க. அப்போது அவர்கள் சொல்லும் அட்ரஸை கரைக்டா கேட்டுக்கிட்டு போவாங்க. அட்ரஸ் கொஞ்சம் மாறினாலும் ஆம்புலன்ஸ் வேறு எங்கோ போயிடும். எல்லாமே இளைஞர்கள்தான். ஒரு பெரிய புரட்சி சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் சம்பந்தப்பட்ட டீமை சந்திக்க சென்றேன். அப்போதுதான் மனிதாபிமானம், உளவியல், மருத்துவம் என விசயங்கள் அதில் இருப்பது தெரிந்தது. ஒரு நபரை ஆம்புலன்சில் ஏற்றி விட்டால், அப்போது அவர்களது உயிரை பிடித்து வைக்கும் மருத்துவத்தை சொல்லித்தருவது என பல ஒரு ஏழு நாள் கோர்ட்ஸ் இருப்பதை தெரிந்து கொண்டேன்.

அதன்பிறகுதான் களத்தில் இறங்க வேண்டும். ஒவ்வொரு முறை ஆம்புலன்சை நம்மை கடக்கும்போது உள்ளே இருக்கிற உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்றுதான் நாமெல்லாம் நினைப்போம். இந்த மாதிரி சமீபத்தில் நாம கேள்விப்பட்ட விசயங்கள், பேப்பரில் படித்த விசயங்கள். நம்மை கோபப்பட வைத்த விசயங்கள் இவை அனைத்தையும் கோர்த்து ஒரு பதிவாக வைத்திருக்கிறேன். படம் ரொம்ப நேர்த்தியாக வந்திருப்பதாக நினைக்கிறேன்.

மேலும், 87 நாட்டு மாடுகள் பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் சொல்லியிருக்கிறேன். இந்த காட்சி 4 நிமிசம் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், தொண்டன் என்பவன் அரசியல் தொண்டன் அல்ல. பக்கத்தில் ஒருவன் அடிபட்டு கிடக்கும்போது அவனை ஓடிப்போய் கையை பிடித்து தூக்குபவன்தான் தொண்டன். தொண்டன் என்றாலே அரசியல் அந்த மாதிரி ஆயிடுச்சு. இது அரசியல் படமில்லை என்பதை தெளிவாக சொல்லிக்கொள்கிறேன்.

நான் கடந்து வந்தது, நான் பார்த்தது, நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத்தான் நான் எனது படங்களில் சொல்லி வருகிறேன். நாடோடிகள் படத்தில் சேரும்போது நண்பர்கள்கிட்ட வராதீங்க. ஆனால் பிரியும்போது ஏன்டா நண்பர்கள்கிட்ட சொல்ல மாட்டேங்குறீங்க. நிமிசத்துல பிச்சிக்கிட்டு போயிடுறீங்கன்னு கோப்பப்பட்டு திமிறா தூக்கினாங்கல்ல அதுதான் என்னோட கோபம். இந்த படத்திலயும் கிளாஸ் ரூம்பல போய் ஒரு பெண்ணை ஒருத்தன் அடிப்பான். இரண்டாவது அடி விழும்போது இன்னொரு பெண் அவனை பிடித்து விடுவாள். அதன்பிறகுதான் அத்தனை பெண்களும் சேர்ந்து கதவை மூடிக்கொண்டு அடிப்பார்கள். இந்த படம் வந்த பிறகு எங்கோ ஒரு பெண் ணுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மற்ற பெண்கள் ஒன்று சேர்ந்து அந்த ஆணை அடிப்பார்கள். அந்த அளவுக்கு தைரியம் வரும்.

தொண்டன் படப்பிடிப்பு தொடங்கியபோது ஆம்புலன்ஸ்க்கு 108 என வைக்கலாமா என்று கேட்டபோது, அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. அதனால் ஆம்புலன்ஸ்க்கு உயிர் என்று பெயர் வைத்தேன். தொண்டன் வெற்றிக்குப்பிறகு 32 மாவட்டத்திலும் ஒரு ஆம்புலன்ஸ் நிறுத்தனுங்கிற ஆசை உள்ளது. எல்லாவற்றுக்குமே சட்டமும், போலீசும் வந்து நிற்க முடியாது. சின்னச்சின்ன விச யங்களை நாமளே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் இந்த தொண்டன் படத்தில் சொல்ல வருகிறேன் என்கிறார் சமுத்திரகனி.

April 10 / 2017