செய்தி விவரங்கள்

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் வேண்டுமென்றே இழுத்தடிப்பு; எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் துரிதமாக விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கோரவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வு மூலமாவது தங்களை விடுதலை செய்யுமாறு தமிழ் அரசியல் கைதிகள் தம்மிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் நேற்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு, அரசாங்கத்திடம் விடுதலை கோரும் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்பின்னர் ஐபிசி தமிழ் செய்திகளுக்கு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் வேண்டுமென்றே இழுத்தடிப்புச் செய்யப்படுவதாக அவர்கள் கூறியதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோன்று குற்றஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் மாத்திரமே குற்றவாளிகளாக காணப்படுவதாகவும் அந்த வாக்குமூலம் சுயமாகக் கொடுக்கப்படவில்லை என்றும் அரசியல் கைதிகள் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

April 21 / 2017