செய்தி விவரங்கள்

ஸ்ரீலங்கா பாதுகாப்புப் படை மறுசீரமைக்கப்பட வேண்டும்

ஸ்ரீலங்காவின் பாதுகாப்புப் படை மறுசீரமைக்கப்பட வேண்டியது அவசியமென சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் சர்வதேச ரீதியில் ஆராயும் இணைய சஞ்சிகையான த டிப்லோமெட் (The Diplomat) செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் த எசோசியேட் பிரஸ் (The Associated Press)   ஊடகம் அண்மையில் வெளியிட்டிருந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த இணையத்ததளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் அங்கம் வகித்த ஸ்ரீலங்க இராணுவ உறுப்பினர்கள் ஹெய்ட்டியில் பணியில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் அவர்களின் பாலியல் ரீதியிலான எண்ணங்கள் எவ்வாறு காணப்பட்டன என்பது தொடர்பில் த எசோசியேட் பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

ஸ்ரீலங்கா இராணுவத்தினர் 12 வயதுச் சிறுவர், சிறுமிகளைக் கூடத் தமது பாலியல் இச்சைகளுக்காகப் பயன்படுத்த விரும்பியதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இவ்வாறான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டனையை எதிர்நோக்குவதென்பது மிகவும் அரிதானதாகும் மேலும் அவரகள் இராணுவத்தினர் என்பதால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் ஐ.நா அமைதி காக்கும் படையினர் மீது 2,000 வரையான பாலியல் மீறல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக த எசோசியட் பிரஸ் மேற்கொாண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமைதி காக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் பாலியல் துஷ்பிரயோகங்கள்  முன்னரை விடத் தற்போது மிகவும் அதிகமாகக் காணப்படுவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இவ்வாறான குற்றச்சாட்டுக்களில் 300 வரையான சம்பவங்கள் சிறுவர்கள் மீதான பாலியல் சம்பவங்களாகும். இதில் சம்பந்தப்பட்ட ஒரு சில குற்றவாளிகளே தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு ஏனையவர்கள் தொடர்பில் விசாரணைகள்கூட நடத்தப்படவில்லை.

இவ்வாறான பாலியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட பல இராணுவ வீரர்கள் தொடர்ந்தும் இராணுவத்தில் அங்கம் வகிக்கின்றனர்.  

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் அங்கம் வகித்த போது பாலியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட சிலர் தற்போதும் தமது இராணுவத்தில் பணியாற்றுவதாக ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதேவேளையில் அமைதி காக்கும் படையில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ வீரர்கள் ஐக்கிய நாடுகள் சபையால் தொடர்ந்தும் ஹெய்ட்டி உள்ளிட்ட பல இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.

ஸ்ரீலங்கா இராணுவ வீரர்கள் மீது சிறுவர் பாலியல் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் அவர்களை  அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தி வருவதாக என ஏ.பி ஊடகம் மேற்கொண்ட உறுதிப்படுத்தியிருந்தது.

ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 200 வீரர்கள் மாலிக்கு அனுப்பப்படும் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் அங்கம் வகிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் ஸ்ரீலங்கா அரசானது தனது பாதுகாப்புத் துறையைச் சீர்திருத்துவதில் அக்கறை காண்பிப்பதாக நம்புவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் போதும் அதன் பின்னரும்   பாதுகாப்புப் படையினர் பல்வேறு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களுடன்  தொடர்புபட்டமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றமையையும் மறந்துவிடக் கூடாது என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற வன்முறைகளை ஆராயும் போது இனம் என்கின்ற காரணியை நினைவிற் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும், இராணுவத்தில் அங்கம் வகிப்போர் பெரும்பான்மை இனமான சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தமிழர்கள் எனவும் த டிப்லோமெட் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகை : politics குறிச்சொற்கள் : #Army #reform 0 கருத்துக்கள்
April 21 / 2017