செய்தி விவரங்கள்

வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்களுடன் பேச்சுவார்த்தை மாகாண முதலமைச்சர்

வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்களுக்கும், வட மாகாண பதில் முதலமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் இடையில் இன்று மாலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் வட மாகாணசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

எனினும் குறித்த பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்படாத நிலையில், இன்று இரவு 7.00 மணிக்கு, வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்களுக்கும், வட மாகாண பதில் முதலமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்படத்தக்கது.

தாம் கடமையாற்றி வந்த பாடசாலைகளில் புதிய அதிபர்கள் நியமிக்கப்பட்டமையால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடமாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று காலை வடமாகாண சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரும் வட மாகாணத்திலுள்ள அதிபர் வெற்றிடங்கள் காணப்பட்ட பாடசாலைகளுக்கு தாம் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வந்த்தாகவும், தற்போது மத்திய அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட பரீட்சையின் மூலம் புதிய அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் தாங்கள் பணியை இழக்க நேரிட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனினும், தமக்கு நியாயம் வழங்குமாறு கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதங்கள் மூலம் தெரியப்படுத்திய போதிலும், எந்தவித பலனும் கிடைக்கவில்லை என்றம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கடமை நிறைவேற்று அதிபர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதிகாரிகளுக்கு தம்மால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்களுக்கு தீர்வு கிடைக்காத நிலையிலே, இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஸ்ரீலங்காவில் ஏனைய மாகாண பாடசாலைகளில் கடமை நிறைவேற்று அதிபர்களாக நியமிக்கப்பட்டு பணியாற்றிவரும் அதிபர்கள் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது மாகாணத்திலுள்ள கடமை நிறைவேற்று அதிபர்களுக்கு மாத்திரமே இவ்வாறான பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் வடமாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட வடமாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் பங்குபற்றி தமது அதிருப்தியை வெளியிட்டனர்.

வடமாகாணத்தில் 200 கடமை நிறைவேற்று அதிபர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், முதற்கட்டமாக 100 கடமை நிறைவேற்று அதிபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வகை : politics குறிச்சொற்கள் : #President #Srilanka North 0 கருத்துக்கள்
March 06 / 2017