செய்தி விவரங்கள்

தமிழர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு அழிக்கத் திட்டம்

ஆயுத ரீதியாக தமிழர்களைக் கொன்று குவித்த ஆட்சியாளர்கள் தற்போது தமிழர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு அழித்து, பொருளாதாரத்தை நசுக்கிக் கொண்டிருப்பதாக ஜனநாயக போராளிகள் கட்சி குறிப்பிட்டுள்ளது.

தமிழர்களை மதுவுக்கு அடிமையாக்கி மண்ணில் இருந்து அகற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அக்கட்சியின் மட்டக்களப்பு அம்பதளை இணைப்பாளர் கணேசன் பிரபாகன் தெரிவித்துள்ளார்.

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு தினம் கடந்த 10 ஆண்டுகளாக எவராலம் அனுஷ்டிக்கப்படாத நிலையில், 29 ஆவது வருடம் ஜனநாயகப் பேராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் அனைத்து மக்களும் கலந்துகொள்ளுமாறும் இன்றைய தினம் மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனநாய போராளிகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

ஸ்ரீலங்காவில் கடந்த காலங்களில் மாறிமாறி வந்த ஆட்சியாளர்கள், ஆயுத ரீதியாக கொன்று குவித்தார்கள் என்றும் வாழ்வாதாரத்தை அடியோடு அழித்து பொருளாதாரத்தை நசுக்குவதாகவும் ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பதளை இணைப்பாளர் கணேசன் பிரபாகன் குறிப்பிட்டுள்ளார்.  

மட்டக்களப்பின் எல்லைப் பகுதிகளில் அரச காணிகள் பல உள்ள போதிலும், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை திட்டமிட்ட வகையில் அழிப்பதற்காக கல்குடா பிரதேசத்தில் மதுபான தொழிற்சாலை அமைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சி எனக் குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் புலிகளின் ஆலோசனைக்கமைய செயற்பட்டதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தங்களுடைய பொருளாதாரத்தை நோக்கி பயணம் செய்வதாகவும் மக்களின் அபிவிருத்தி தொடர்பாக எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

மக்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினைத் தவிர வேறு ஒரு தெரிவும் இருக்காததன் காரணமாக, கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை ஆதரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இனிவரும் காலங்களில் ஜனநாயக போராளிகள் கட்சி தமிழ் மக்களுக்கு தலைமைத்துவம் வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

April 18 / 2017