செய்தி விவரங்கள்

மைத்திரி-ரணில் ஆட்சியில் தொடரும் சித்திரவதைகள் - ஐ.நா மீள்பார்வைக்கு

ஸ்ரீலங்காவில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கடத்தல் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் சாட்சியங்களுடன் கூடிய ஆவணமொன்றினை ஐ.நா மனித உரிமை பேரவையின் சர்வதேச காலாகால மீளாய்வுச் செயற்பாட்டிற்கு சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று சமர்ப்பித்துள்ளது.

தென்னாபிரிக்கா ஜொஹானஸ்பேர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஸ்ரீலங்காவில் உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் (ஐ.ரி.ஜே.பி) என்ற அமைப்பே 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் வரை அதாவது மைத்திரி ரணில் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற 48 கடத்தல் மற்றும் சித்திரவதை சம்பவங்களை உள்ளடக்கிய இந்த ஆவணத்தை ஐ.நாவின் மீள்பார்வைக்காகச் சமர்ப்பித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் ஸ்பானத்தின் உறுப்பு நாடுகளில் நிலவும் மனித உரிமை நிலைமைகள் காலத்திற்குக் காலம் காத்திரமான மீளாய்விற்கு உட்படுத்தப்பட்டுவருகிறது.

இந்த வகையில் யூ.பி.ஆர் எனப்படும் சர்வதேச காலாகால மீளாய்வுச் செயற்பாட்டின் 28 ஆவது கூட்டம் ஸ்ரீலங்கா தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி இடம்பெற இருக்கிறது.

ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு மனித உரிமைகளை மதிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அவைக்குண்டான கடப்பாடுகள் தொடர்பிலான பொறுப்புக் கூறலை வலிறுத்தும் நோக்கிலேயே இந்த சர்வதேச காலாகால மீளாய்வு ஐ.நா மனித உரிமை பேரவையினால் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

போரின்போதும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் முன்னைய ஆட்சிக்காலத்தில் மட்டுமல்ல 2015 ஜனவரியில் பதவியேற்ற மைத்திரி-ரணில் ஆட்சியின் போதும் இடம்பெற்றுவருவதாக ஐ.ரி.ஜே.பி காலங்காலமாகத் தெரிவித்துவருகிறது.

ஐ.நா விலும் சர்வதேச அரங்கிலும் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற மிகமோசமான போர்க்குற்றங்கள் மற்றும் மனித நேயத்திற்கு எதிரான சம்பவங்கள் முன்கொணரப்பட்ட வித்திட்ட ஐ.நா நிபுணர்கள் குழுவின் மூன்று உறுப்பினர்களில் ஒருவரான ஜாஸ்மின் சூக்கா தலைமையில் இயங்கும் ஐ.ரி.ஜே.பி இந்த ஆவணப்படுத்தலை மிகவும் துல்லியமான முறையில் மேற்கொண்டுள்ளது.

இந்த அறிக்கையில் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் வரை அதாவது மைத்திரி ரணில் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற 48 கடத்தல் மற்றும் சித்திரவதை சம்பவங்கள் சாட்சியங்களின் சத்தியப் பிரமாண வாக்குமூலங்களுடன் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கடந்தவாரம் நிறைவடைந்த ஐ.நா மனித உரிமை பேரவையின் 34 கூட்டத்தொடரின் போது பக்க நிகழ்வொன்றினை நடாத்ததிய சர்வதேச சட்டவல்லுனர் ஜாஸ்மின் சூக்கா வடக்கிலே மிக முக்கியமான சித்திரவதை கூடமாக வவுனியாவில் அமைந்துள்ள ஜோசப் முகாம் எனப்படும் கூட்டுப்படைத் தலைமையகம் காணப்படுவதாகவும் முன்னாள் இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட ஐந்து மூத்த இராணுவ அதிகாரிகள் இந்த வதை முகாமிற்குப் பொறுப்பாக இருந்துள்ளார் என்றும் தெரிவித்திருந்தது.

பெயர் விபரங்கள் பதவிநிலைகள் சித்திரவதைக்கூடங்களுக்கான  வரைபடங்கள் போன்றவற்றுடன் இந்த அறிக்கையினை வெளியிட்டு அங்கு  உரையாற்றியிருந்த ஐ.ரி.ஜே.பியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜாஸ்மின்  சூக்கா யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் ஜோசப் முகாம் என்று

பரவலாக அறியப்பட்ட வன்னிக் கூட்டுப்படைக் கட்டளைத்தலைமையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் சிவிலியன்கள் மீது  தொடர்ச்சியாக  மிகமோசமான  சித்திரவதைகள் கொடூரமான பாலியல் வன்கொடுமைகள் கற்பழிப்புக்கள் போன்ற கொடுமைகள் அங்கு நிலைகொண்டிருந்தபடையினராலும்  அதிகாரிகளினாலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டதாகவும்  அது குற்றஞ்சாட்டியிருந்தது.

ஐ.ரி.ஜே.பியினால் முன்வைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு ஸ்ரீலங்கா இதுவரை எவ்வித பிரதிபலிப்புக்களையும் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.

ஆனால் ஐ.நா மனித உரிமை பேரவைத் தொடரில் உரையாற்றிய ஸ்ரீலங்கா வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர புதிய அரசின் கீழ் இவ்வாறான சம்பவங்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன் இங்கு பணியாற்றிய பணியாற்றிவரும் மேலும் 36  இராணுவப் புலனாய்வு அதிகாரிகளின் பெயர்விபரங்களும்  அங்கிருந்து 40 ற்கும் அதிகமான இராணுவத்திற்கு தகவல் வழங்குவோரின் பெயர் விபரங்களும் இவர்களில் சுமார் 25 பேரின் தொலைபேசி இலக்கங்கள் புகைப்படங்களும் தம்மிடம் இருப்பதாகவும் சிறிலங்காவில்உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பு தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வகை : politics குறிச்சொற்கள் : #UN Srilanka 0 கருத்துக்கள்
March 31 / 2017