செய்தி விவரங்கள்

அரசியல் தலைமைகளின் சீர்கெட்ட நிர்வாகமே மீதொட்டமுல்ல அனர்த்தம்

அரசியல் தலைமைகள் சிலரின் சீர்கெட்ட நிர்வாகமே மீதொட்டமுல்லயில் அனர்த்தம் ஏற்படக் காரணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்பற்ற அரசியல்வாதிகளின் அசமந்தப் போக்கே 30 க்கும் மேற்பட்டவர்கள் குப்பை மேடு சரிந்த அனர்த்தத்தில் உயிரிழக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு – ஏறாவூர் 05 சக்சஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் ஏறாவூர் 5 சேனைக்குடியிருப்பு குமாரவேலியார் கிராம மக்கள் இணைந்து நடத்திய விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த காலங்களில் இருந்த அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற தன்மை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல காணிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியிலும், தற்பொழுதைய நல்லாட்சியிலும் சில அரசியல் தலைமைத்துவங்களின் வங்குரோத்து அரசியல், பொறுப்பற்ற தன்மைகள் மற்றும் சுயநலப்போக்குகள் காரணமாக வடக்கு கிழக்கில் பல மக்கள் காணிகளை இழந்து நிற்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நாட்டில் புரையோடிப் போயுள்ள இனவாதம் என்கின்ற மலை, வங்குரோத்து அரசியல், முதலாளித்துவம் மற்றும் ஏமாற்றுப் பேர்வழிகள் அப்புறப்படுத்தப்படும் பட்சத்திலேயே, சாதாரண ஏழை மக்களும் ஏனைய மக்களுக்கு இணையாக வாழ முடியும் என்றும் சதாசிவம் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார். 

வகை : politics குறிச்சொற்கள் : #mitottamulla disaster 0 கருத்துக்கள்
April 18 / 2017