செய்தி விவரங்கள்

அ.தி.மு.காவின் ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பில் விசாரிக்க வலியுறுத்தல்

அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் கடந்த 6 ஆண்டு கால ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பில் விசாரிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என திராவிட முன்னேற்றக்கழக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இரத்து செய்யப்பட்டதை கண்டித்து புதுவண்ணா‌ரப்பேட்டையில் திமுக சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் உரையாற்றிய போது ஸ்டாலின் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா மற்றும் இதர முறைகேடுகளில் ஈடுபட்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது உரிய நடவடிக்கை தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஒன்றும் உத்தமர் இல்லை என்றும் அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்த காலத்தில் ஊழல் வசூலை ஒய்யாரமாக செய்தவர் தான் எனவும் ஸ்டாலின் குற்றம்சுமத்தியுள்ளார்.

முன்னதாக சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இரத்துக்கு காரணமான தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வகை : politics குறிச்சொற்கள் : #Stalin #ADMK Scam 0 கருத்துக்கள்
April 13 / 2017