செய்தி விவரங்கள்

அதிக முறை விண்வெளியில் நடந்த வீராங்கனை - 57 வயது பெண் சாதனை

எட்டாவது முறையாக விண்வெளி நடை என சொல்லப்படும் ஸ்பேஸ் வாக் (Spacewalk) செய்ததன் மூலம், அதிக முறை விண்வெளியில் நடந்த வீராங்கனை என்ற சாதனையை அவர் கடந்த வாரம் படைத்திருக்கிறார். விண்வெளிப் பயணம் 50-51 எனப் பெயரிடப்பட்டுள்ள மிஷன் மூலமாக, விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற அவர் இந்த சாதனையைப் படைத்திருக்கிறார். மேலும், அதிக நேரம் விண்வெளியில் செலவிட்ட வீராங்கனை என்ற சாதனையையும் அவர் தன் வசமாக்கி உள்ளார்.

தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அவர், ஜூன் மாதம் வரை அங்கு இருப்பார். இந்த இரு சாதனைகள் மட்டுமின்றி, மேலும் பல சாதனைகள் பட்டியலில் பெக்கி விட்சன் பெயர் இடம்பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டின் இறுதியில் விண்வெளிக்குப் பறந்தபோது, அதிக வயதில் விண்வெளிக்குப் பறந்த வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். 2007-ம் ஆண்டில் அமெரிக்காவின் பார்பரா மோர்கன் என்ற வீராங்கனை தனது 55-வது வயதில் விண்வெளிக்குப் பறந்ததே இதற்கு முன்னர் சாதனையாக இருந்தது.

விண்வெளி நடை (Spacewalk) எனப்படுவது ஊர்திக்கு வெளியே விண்வெளியில் ஒரு வீரர் செயல்படுவதாகும். சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்பாகங்களில் புதிய பாகங்களை இணைக்கவோ அல்லது இயந்திரக் குறைபாடுகளை சரிசெய்யவோ பொதுவாக விண்வெளி நடை மேற்கொள்ளப்படும். பெக்கி விட்சன் இதுவரை மொத்தம் 53 மணி நேரம், 22 நிமிடங்கள் விண்வெளி நடையில் செலவிட்டிருக்கிறார். இதன் மூலம் அதிக நேரம் விண்வெளியில் செலவிட்ட வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கு உண்டு.


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 50 மணி நேரம் மற்றும் 40 நிமிடங்கள் விண்வெளி நடையில் செலவிட்டதே இதற்கு முன்னர் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல, சுனிதா வில்லியம்ஸ் இதுவரை ஏழு முறை ஸ்பேஸ் வாக் செய்திருக்கிறார். தற்போது இந்த இரு சாதனைகளையும் பெக்கி விட்சன் முறியடித்திருக்கிறார்.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் விண்வெளிப் பயணத்துக்குத் தலைமை தாங்கிய முதல் வீராங்கனை என்ற சாதனையும் பெக்கியின் வசம் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நாசாவின் இரண்டு மிஷன்களுக்கு அவர் இதுபோல் தலைமை தாங்கியிருக்கிறார். தனது வாழ்நாளில் மொத்தம் 500 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் அவர் செலவிட்டிருக்கிறார்.


சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெளியே ஷேன் கிம்ப்ரோ என்ற சக விண்வெளி வீரருடன் வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் கவசத்தைப் பொருத்துவதற்காக விண்வெளி நடை மேற்கொண்டபோது, அந்தக் கவசமானது பறந்துவிட்டது. அதன் பின், நிலைமையைச் சமாளிக்க கை வசம் இருந்த பழைய கவசம் ஒன்றைப் பொருத்தியிருக்கிறார்கள். இதுபோன்ற பல சோதனைகளைக் கடந்து தான் அவரால் பல சாதனைகளைப் படைக்க முடிந்தது. சோதனைகளும், வயதும் பெக்கி விட்சனை ஒரு போதும் துவண்டு விடச் செய்வதில்லை.

வகை : science குறிச்சொற்கள் : #guinness record 0 கருத்துக்கள்
April 04 / 2017