செய்தி விவரங்கள்

22 மேஜர் ஜெனரல்களின் கனவைப் கலைத்த ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வா

ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மூன்றாவது தடவையும் தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கான கோரிக்கையை, ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் தற்போதைய பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

2015 ஓகஸ்ட் 21 ஆம் நாள், 55 வயதை எட்டிய அவர், ஓய்வு பெற்றிருக்க வேண்டிய நிலையில், முதலில் அவருக்கு ஆறு மாதங்களும், பின்னர், ஒன்றரை ஆண்டுகளும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் ஆறு மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டால், மூன்றாவது சேவை நீடிப்பை பெற்ற இராணுவத் தளபதியாக இவர் விளங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இராணுவத் தளபதி பதவியை குறிவைத்திருக்கும் பல மூத்த மேஜர் ஜெனரல்களின் கனவுகள் இல்லாது போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா முக்கியமானவர் எனவும் இவர் எதிர்வரும் டிசெம்பர் 03ஆம் நாள் ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல்கள் சுதந்த ரணசிங்க, ரேனக உடவத்த, ஆர்.இரத்தினசிங்கம், பி.மிகுந்துகுலசூரிய ஆகியோரும் ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2018 மார்ச் 13ஆம் நாள் முன்னாள் இராணுவப் புலனாய்வு பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகரவும், ஓய்வு பெற நேரிடும். இராணுவத் தளபதியாக நியமிக்கப்படாது போனால், மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவும், எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் நாள் ஓய்வுபெற வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் இரண்டாவது பதவி நீடிப்புக் காலத்தில், இராணுவத்தில் இருந்து 22 மேஜர் ஜெனரல்கள் ஓய்வு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கூட்டுப்படைகளின் தளபதியாக உள்ள உயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலக வரும் ஜூலை 16ஆம் நாள் ஓய்வு பெறவுள்ள நிலையில், முப்படைகளின் தளபதிகளும் அந்தப் பதவியின் மீது குறிவைத்துள்ளனர்.

கூட்டுப்படைகளின் தளபதி பதவி, இராணுவத் தளபதியாக உள்ள லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு வழங்கப்பட்டால், அடுத்த இராணுவத் தளபதியாகும் வாய்ப்பு மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகை : world-affairs குறிச்சொற்கள் : #Srilanka military 0 கருத்துக்கள்
April 11 / 2017