செய்தி விவரங்கள்

கஞ்சாவில் ரொட்டி சுட்டு படைத்தோம்-கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் வாக்குமூலம்

பிதிர்க்கடன்களை செய்வதற்கு கஞ்சாவில் ரொட்டி சுட்டு படைத்ததாக கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி – செல்வாநகர் பகுதியில் வைத்து இரண்டாயிரத்து 750 கிராம் கஞ்சாவுடன் நீர்கொழும்பைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கிளிநொச்சிப் பொலிஸாரால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் குறித்த சந்தேகநபரை இன்று முன்னிலைப்படுத்திய போதே, இவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றிற்கு முன்னாள் அமைந்துள்ள துர்க்கை அம்மன் ஆலயத்திலே தான் வேலை செய்ததாகவும் சில பிதிர்க்கடன்களை செய்வதற்காக கஞ்சாவில் ரொட்டி சுட்டுப் படைப்பதாகவும் திறந்த நீதிமன்றத்தில் சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக குறித்த ஆலயத்தின் பதிவு மற்றும் ஆலயத்தை சோதனையிடுமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு அமைய, கிளிநொச்சிப் பொலிஸார் மற்றும் கரைச்சி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அமல்ராஜ் மற்றும் கலாச்சார உத்தியோகத்தர், கிராம அலுவலர் கின்சான்கொல், அபிவிருத்தி உத்தியோகத்தர் ரெயிநோல்ட் ஆகியோர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இருப்பினும், எந்தவிதமான சந்தேகத்திற்குரிய பொருட்களும் மீட்கப்படவில்லை என கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த ஆலயம் பதிவற்ற ஆலயம் என்பதுடன் தனியார் காணி ஒன்றில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ளதுடன், ஒரு பகுதி வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

வகை : world-affairs குறிச்சொற்கள் : #Drug 0 கருத்துக்கள்
March 06 / 2017