செய்தி விவரங்கள்

மட்டக்களப்பிற்கு ஜனாதிபதி விஜயம்-மாவட்ட செயலகத்தில் திட்டமிடல் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்கான திட்டமிடல் கூட்டம் நேற்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் நடைபெற்றது.

பேண்தகு யுகம் - மூன்றாண்டு உதயமாகியுள்ளததை முன்னிட்டு நாடு பூராகவும் பல்வேறு திட்டங்கள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையில் இந்த வருடத்துக்கான மட்டக்களப்பு மாவட்டத்துக்கான முதலாவது விஜயம் இடம்பெறவுள்ளது.

இந்த விஜயத்தில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள 1014 மில்லியன் ரூபா செலவிலான நான்கு மாடிக்கட்டத்தை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.

அத்துடன் ஏறாவூருக்கு விஜயம் செய்து போதைக்கு எதிரான செயற்திட்ட வேலைகள், மரநடுகை, காணி ஆவணங்கள் வழங்கல், சூழலியல் தொடர்பான பிரதான நிகழ்வுகளில் கலந்துகொள்வார்.

வறுமை ஒழிப்பை நோக்காகக் கொண்ட ஜனாதிபதியின் மாவட்ட ரீதியான செயற்பாடுகளின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த பெப்பரவரி 01 ஆம் திகதி ஜனாதிபதி விஜயம் தொடர்பான இன்றைய திட்டமிடல் கூட்டத்தில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர், மேலதிக செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்திகளை உருவாக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பேண்தகு யுகம் - மூன்றாண்டு திட்டத்தின் வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.

இதில் ஒரு பகுதியாகவே கிழக்கு மாகாணத்துக்கான ஜனாதிபதியின் இந்த விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வகை : world-affairs குறிச்சொற்கள் : #President #Mattakalappu 0 கருத்துக்கள்
March 05 / 2017