செய்தி விவரங்கள்

அமெரிக்காவிற்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் துருக்கி ஜனாதிபதி

துருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவை புதுப்பிக்கும் வகையில் துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் அமெரிக்காவிற்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் மே மாதம் குறித்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் இதன்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப்பை வொஷிங்டனில் சந்தகலந்துரையாடவுள்ளதாகவும் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

துருக்கி தலைநகர் அங்காராவில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் தோல்வியில் முடிந்த துருக்கி இராணுவ புரட்சியை தொடர்ந்து துருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி மேற்கொள்ளவுள்ள இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம், சிதைவடைந்த இருதரப்பு உறவை வலுப்படுத்தும் என எர்டோகன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

துருக்கியில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியின் பின்னணியில் அமெரிக்காவில் வசிக்கும் துருக்கி மதகுரு பெத்துல்லா குலென் இருப்பதாக துருக்கி ஜனாதிபதி ஏர்டோகன் குற்றம் சாட்டி வருகின்றார்.

இந்த நிலையில், குறித்த மதகுருவின் நாடு கடத்தல் தொடர்பிலும் இச்சந்திப்பின் போது வலியுறுத்தவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர், துருக்கி ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள முதல் சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

வகை : world-affairs குறிச்சொற்கள் : #President #erdogan 0 கருத்துக்கள்
April 21 / 2017