செய்தி விவரங்கள்

பிரித்தானியாவின் தற்போதைய ஆட்சியை மாற்ற வேண்டும் : ஜெரமி கோபின்

பிரித்தானியாவின் தற்போது நடைமுறையிலுள்ள மோசடிமிக்க ஆட்சி முறையை மாற்றி மக்களின் கைகளுக்கு அதிகாரங்களையும் சொத்துக்களையும் சென்றடையச் செய்யும் வகையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரித்தானியாவின் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோபின் வலியுறுத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் எதிர்வரும் யூன் எட்டாம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் முடிவு குறித்து முன்கூட்டியே ஒரு முடிவிற்கு வர முடியாது என்றும் தனது முதலாவது பொதுத் தேர்தலுக்கான கூட்டத்தில் ஜெரமி கோபின் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் தற்போதைய பிரதமர் திரேஷா மேயின் பதவிக் காலம் 2020 ஆம் ஆண்டில் முடிவடையவுள்ள நிலையில் மூன்று வருடங்களுக்கு முன்னதாகவே அவசரமாக பொதுத் தேர்தலை நடத்தும் அறிவிப்பை விடுத்தார்.

கன்சவேடிவ் கட்சியின் பலத்தை அதிகரித்துக்கொள்ளும் நோக்கில் பிரதமர் மே விடுத்த இந்த அதிரடி அறிவிப்பிற்கு பிரித்தானிய பாராளுமன்றமும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

எனினும் திரேஷா மே யின் இந்தத் தீர்மானத்தை தடுப்பதற்கு தொழிற் கட்சியின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் ஜெரமி கோபினுக்கு சந்தர்ப்பம் இருந்தும் அதனை அவர் செய்யாது மே யின் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்குமாறு தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தார்.

இதற்கமையவே மே யின் தேர்தல் அறிவிப்பிற்கு 522 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்திருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் இலண்டனில் தொழிற் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜெரமி கோபின் கன்சவேடிவ் கட்சி வங்குரோத்து அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டதுடன் வரி ஏய்ப்பில் ஈடுபடும் தரப்பினர் மக்கள் முன் நிற்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் சொத்துக்களை திருடி ஒருசிலரை மாத்திரம் செல்வந்தர்களாக வைத்திருக்கும் தற்போதைய நடைமுறையை இல்லாதொழிப்பதற்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம் என்றும் குறிப்பிட்டுள்ள கோபின் இதன் ஊடாக தொழிலாளர் வர்க்கத்தினதும் அப்பாவி மக்களினதும் சட்டைப் பைகளை பணத்தால் நிரப்ப நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் உடனடியாக நடைமுறைப்படுத்தும் சில முக்கிய விடையங்களையும் இதன்போது கோபின் தெளிவுபடுத்தினார்.

கூட்டு நிறுவனங்களுக்கான வரிகளை அதிகரிப்பது, மருத்துவம் உட்பட நலன்புரி சேவைகளுக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்வது மற்றும் குறைந்தபட்ச மணித்தியால சம்பளத்தை பத்து ஸ்ரேலிங் பவுண்களாக அதிகரிப்பதற்கு தான் தீர்மானித்துள்ளதாகவும் ஜெரமி கோபின் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தொழிற் கட்சியினர் மத்தியிலேயே ஜெரமி கோபினின் தலைமைத்துவத்திற்கு கடும் எதிர்ப்புகள் நிலவி வருகின்றன. குறிப்பாக தொழிற் கட்சிக்கு ஆதரவு வழங்கும் பெரிய நிறுவனங்கள் செல்வந்தர்கள் ஆகியோர் ஜெரமி கோபினின் கடும்போக்கு இடதுசாரிக் கொள்கை பொருத்தமற்றது என்று சாடி வருகின்றனர். எனினும் முன்னணி தொழிற்சங்கங்கள் கோபினை ஆதரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வகை : world-affairs குறிச்சொற்கள் : #system #jeramy corbin 0 கருத்துக்கள்
April 21 / 2017