செய்தி விவரங்கள்

வடகொரியா கடமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்: மைக் பென்ஸ் எச்சரிக்கை

அமெரிக்கா மீது வடகொரியா தாக்குதல் நடத்த முற்பட்டால் அந்தத் தாக்குதலை முறியடிப்பதுடன் கடுமையான பதிலளிக்கப்படும் என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் எச்சரித்துள்ளார்.

ஜப்பானில் நங்கூரமிட்டுள்ள அமெரிக்காவின் ரோனால்ட் ரீகன் போர்க் கப்பலிலுள்ள அமெரிக்க படையினர் மத்தியில் உரையாற்றும் போதே அமெரிக்க துணை அதிபர் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார்.

கொரிய வளைகுடாவில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் அங்கு விஜயம் செய்துள்ளார்.

தென்கொரிய விஜயத்தை முடித்துக்கொண்டு ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜப்பானின் யுக்கோசூக்கா துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள ரொனால்ட் ரீகன் யுத்த விமானத் தாங்கி போர்க் கப்பலுக்கும் விஜயம் செய்தார்.

வடகொரியா தனது ஆறாவது அணு ஆயுதப் பரிசோதனையை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கருதப்படுவதால் கொரிய வளைகுடாவில் என்றுமில்லாத அளவிற்கு பதற்றம் தீவிரமடைந்து போர் மூழும் அபாயமும் எழுந்துள்ளது.

குறிப்பாக வடகொரியா அதன் ஸ்தாகத் தலைவரான கிம் இல் சுங்கின் 105 ஆவது சிறார்த்த தினத்தை முன்னிட்டு கடுமையானத் தடைகளையும் எச்சரிக்கைகளையும் மீறி வடகொரியா புதிய ஏவுகணையொன்றை கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிசோதித்திருந்தது.

இந்த சோதனை தோல்வியில் முடிவடைந்த போதிலும் கொரிய வளைகுடாவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக வடகொரியாவின் இந்த நடவடிக்கைகளை அடுத்து கொரிய வளைகுடாவிற்கு அமெரிக்கா தனது யுத்தத் தாங்கிப் போர்க் கப்பலை அனுப்பிவைத்து அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்துள்ள வடகொரியா அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்து வருவதுடன் தனது ஆயுதப் பலத்தை பறைசாற்றும் வகையில் தடைகளை மீறி புதிய ஆயுதப் பரிசோதனைகளையும் நடத்தி வருகின்றது. 

இந்த பின்னணியில் ஜப்பானில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படையினர் மத்தியில் உரையாற்றிய அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் வடகொரியா மீது இராஜதந்திர மற்றும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் கொரிய வளைகுடாவில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைக்குத் தீர்வு காண அமெரிக்கா சீனாவுடன் இணைந்து முயற்சித்து வருவதாகத் தெரிவித்தார்.

அதேவேளை வடகொரியா அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த முற்படுமானால் வடகொரியாவின் எந்தவொரு தாக்குதலையும் அமெரிக்கா முறியடிக்கும் என்றும் தெரிவித்த பென்ஸ் அதேவேளை வடகொரியாவிற்கு பாரிய பதிலடியைக் கொடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

வடகொரியாவின் நடவடிக்கைகளால் கொரிய வளைகுடாவில் தீவிரமடைந்துள்ள பதற்றத்தை தணித்து அங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அமெரிக்காவின் யுத்த விமானத் தாங்கி போர்க் கப்பல்கள் அடங்கிய கார்ல் வின்சன் போர்க் கப்பல்களின் தொடரணி கொரிய வளைகுடாவிற்கு அனுப்பி வைக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்தவாரம் அறிவித்திருந்தார்.

இதனால் வடகொரியா கடும் ஆத்திரமடைந்ததுடன் அமெரிக்காவை கடுமையாக எச்சரிக்கவும் செய்தது. எனினும் கார்ல் வின்சன் போர்க் கப்பல் தொடரணி கொரிய வளைகுடாவிற்கு செல்லவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சான பென்டகன் உறுதிசெய்துள்ளதுடன் குறித்த போர்க் கப்பல் தொடரணி அவுஸ்திரேலியாவை நோக்கியே சென்றுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

கார்ல் வின்சன் யுத்தக் கப்பல் தொடரணி கடந்தஏப்ரல் எட்டாம் திகதி சிங்கப்பூரிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கிய பயணத்தை ஆரம்பித்திருந்தது.

வகை : world-affairs குறிச்சொற்கள் : #north-korea #tough-talk 0 கருத்துக்கள்
April 20 / 2017