செய்தி விவரங்கள்

மைத்ரி, ரணில் அரசாங்கம் நாட்டை காட்டிக்கொடுத்து விட்டது - மஹிந்த குற்றஞ்சாட்டு

ஜெனீவாவில் நடந்து முடிந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மைத்ரி – ரணில் அரசாங்கம் நாட்டை காட்டிக்கொடுத்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்ச மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டுவருட கால அவகாசம் வழங்கும் தீர்மானத்திற்கு இணை அணுசரணை வழங்கியதன் ஊடாக சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் போர் குற்ற நீதிமன்றத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக போரை முடிவுக்கு கொண்டுவந்த படையினரை தண்டிக்க அரசாங்கம் இணங்கியிருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குற்றம்சாட்டியுள்ளார்.

படையினரை தண்டிக்கவோ, வெளிநாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்படவோ மாட்டார்கள் என ஸ்ரீலங்கா ஜனாதிபதியும் – பிரதமரும் தொடர்ச்சியாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கி வருகின்ற போதிலும் ஜெனீவாவில் நடந்தமுடிந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானத்திற்கு இணை அணுசரணை வழங்கியதன் ஊடாக  ஸ்ரீலங்கா அரசாங்கம் நாட்டையும் நாட்டை மீட்ட படையினரையும் காட்டிக்கொடுத்துவிட்டதாக மஹிந்த ராஜபக்ச கடுமையாக சாடியுள்ளார்.

நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கி மேற்குலக நாடுகள் திருப்திபடக்கூடிய புதிய சட்டமொன்றை உருவாக்கவும் போர் குற்ற நீதிமன்ற விசாரணைகளை அனுமதிக்கவும் அதேபோல் மேற்குலக நாடுகள் வலியுறுத்தும் ஏனைய கட்டமைப்புக்களை நிறுவவும் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஜெனீவாவில் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் மஹிந்த குறிப்பிடுகின்றார்.

இந்த நடவடிக்கைகள் மூலம் வெளிநாட்டு நீதிபதிகளை இணைத்துக் கொண்டு போர்குற்ற நீதிமன்றப் பொறிமுறையொன்றை அமைத்து அதன் ஊடாக நாட்டை மீட்ட படையினரை தண்டிக்கவே மைத்ரி – ரணில் அரசாங்கமும் முயல்வதாகவும் மஹிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெனீவாவில் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம், போரின் இறுதிக்கட்டத்தில் சட்டவிரோத சித்திரவதை முகாம்கள் இயங்கியதாகவும் சித்திரவதை, பாலியல் வன்கொடுமைகள் மற்றும் படுகொலைகள் மாத்திரமன்றி,  யுத்தக் குற்றங்களும் இடம்பெற்றதாக ஸ்ரீலங்கா மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதனாலேயே அந்தத் தீர்மானத்திற்கு எதராக தாம் குரல்கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள மஹிந்த ராஜபக்ச இந்த நிலையில் இரண்டு வருடகாலத்திற்குள் குறித்த தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கும் தீர்மானத்திற்கு மீண்டும் அரசாங்கம் இணை அணுசரணை வழங்கியமை நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

எனினும் இந்த நடவடிக்கை மூலம் நாட்டையும் படையினரையும் காப்பாற்ற முடிந்துள்ளதாகத் தெரிவிக்கும் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறி இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்காவிட்டால் மஹிந்தவும் அவரது சகாக்களும் மாத்திரமன்றி படையினரும் தண்டிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வகை : world-affairs குறிச்சொற்கள் : #Maithiripala Sirisena 0 கருத்துக்கள்
March 31 / 2017